Friday, April 26, 2024

தியானம் - சுவாமி விவேகானந்தர்

 




Meditation

Swami Vivekananda


“தியானம் என்றால் மனத்தை தன் பக்கம் திருப்புவது . மனம் அனைத்து எண்ண அலைகளையும் நிறுத்துகிறபோது உலகம் நின்றுவிடுகிறது. உங்கள் உணர்வு விரிவடைகிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் தியானம் செய்யும் போது உங்கள் வளர்ச்சியை நிலைநிறுத்துவீர்கள்"

-சுவாமி விவேகானந்தர்

“Meditation means the mind is turned back upon itself. The mind stops all the thought-waves and the world stops. Your consciousness expands. Every time you meditate you will keep your growth”

-Swami Vivekananda

சுவாமிஜி: தியானம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது மனத்தைக் குவியச் செய்வது. மனம் ஒரு பொருளின்மீது ஒருமைப்பட்டு நிலைபெறுமானால் பிறகு அதனை எந்தப் பொருளின் மீதும் குவிக்கலாம்.

சீடர்: உருவத் தியானம் அருவத் தியானம் என்று இரண்டுவகை தியானங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் என்ன? இவற்றுள் எது மேலானது?

சுவாமிஜி:முதலில் மனத்தை ஏதாவது ஒரு பொருளின்மீது குவித்துத் தியானத்தைத் தொடங்க வேண்டும். ஒரு சமயம் நான் என் மனத்தை ஒரு கறுப்புப் புள்ளியின் மீது குவியும்படிச் செய்தேன் . கடைசியில் என்னால் அந்தப் புள்ளியைப் பார்க்க முடியவில்லை: அந்தப் புள்ளி என் முன்னால் இருக்கிறது என்பதைக்கூடக் காண முடிய வில்லை. மனம் வழக்கம்போல் இயங்கவில்லை. மனம் வேலை செய்வதால் எழும் எந்தவிதமான அலையும் எழவில்லை காற்று சிறிதும் வீசாத அசைவே இல்லாத கடல்போல் இருந்தது. அந்த நிலையில் புலன்களைக் கடந்த உண்மையை நான் சிறிது உணர்வதுண்டு. எனவே மிகச் சாதாரண புறப் பொருளின் மீது தியானம் செய்வதுகூட மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறேன். ஆனால் மனத்திற்குப் பிடித்த பொருள் மீது தியானம் செய்யும்போது மனம் மிகவும் எளிதாக அமைதி அடைகிறது என்பதும் உண்மை. இந்த நாட்டில் இத்தனை தெய்வ வடிவங்களை வழிபடுவதற்கு இதுதான் காரணம். இத்தகைய வழிபாட்டிலிருந்து எத்தகைய அற்புதமான கலை வளர்ந்துள்ளது! ஆனால் இப்போது அத்தகைய நிலை இல்லை என்றாலும் உண்மை என்னவென்றால் தியானப்பொருள் எல்லோருக்கும் ஒன்றாக இருக்க முடியாது என்பதே மக்கள் தாங்கள் எந்தப் புறப்பொருளைத் தியானித்து நிறைநிலையை அடைந்தார்களோ அதை மட்டும் உலகிற்கு போதித்தார்கள். இந்தப்புறப் பொருட்கள் எல்லாம் பூரண மன அமைதியை அடைவதற்கு உதவுபவை மட்டுமே என்றஉண்மையை மறந்து உருவங்களை அளவுகடந்து கொண்டாடினார்கள் வழிகளில் முழுக் கவனத்தையும் செலுத்தினார்களே தவிரஅது சென்று சேரும் முடிவை மறந்து விட்டார்கள் உண்மையில் மனத்தில் அலைகளே இல்லாமல் செய்வது தான் நோக்கம் ஆனால் மனம் ஏதாவது ஒரு பொருளின் மீது ஆழ்ந்து ஒன்றாமல் இதை அடைய முடியாது.

சீடர் :மனம் ஒரு பொருள் மீது முழுமையாக ஆழ்ந்து அதனுடன் ஒன்றிவிட்டால் அது நமக்கு பிரம்மஞானத்தை எப்படித் தரும்?

சுவாமிஜி: தரும் நாம் தியானிக்கும் பொருளின் வடிவத்தை மனம் முதலில் அடைந்தாலும் பிறகு அந்த உணர்வு மறைந்துவிடும் அதன் பிறகு தூய்மையான உண்மை இருப்பின் அனுபவம் எஞ்சும்.

சீடர்: சரி மன ஒருமைப்பாட்டை அடைந்த பிறகும் ஆசைகள் தோன்றுகின்றனவே அது எப்படி?

சுவாமிஜி: அவை சம்ஸ்காரங்களால் உண்டாகின்றன. புத்தர் சமாதியில் ஒன்றப்போகின்ற நேரத்தில் காமன் வெளிப்பட்டான் .காமன் என்று எதுவும் வெளியே உண்மையில் இல்லை முந்தைய சம்ஸ்காரங்களே நிழல் வடிவில் வெளியில் தோன்றியது.

சீடர் : ஆனால் நிறைநிலையை அடையுமுன் பல வகையான பயங்கர அனுபவங்களை அடைய வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவையும் மனத்தின் கற்பனை தானா?

சுவாமிஜி: கற்பனை அல்லாமல் வேறு என்ன? அவை மனத்தின் புறத் தோற்றங்கள் என்பதைச் சாதகன் அந்த வேளையில் அறிவதில்லை மனத்திற்கு வெளியே எதுவும் இல்லை. நீ வெளியே இருப்பதாகக் காண்கின்ற உலகம்கூட வெளியில் இல்லை. எல்லாமே மனத்தின் கற்பனைதான். மனம் அலைகளற்றுப் போகும் போது அது பிரம்ம உணர்வைப் பிரதிபலிக்கிறது அப்போது எல்லா உலகங்களின் காட்சிகளும் ஏற்படலாம். யம் யம் லோகம் மனஸா ஸம்விபாதிஎந்த உலகத்தை காண வேண்டும் என்று நினைக்கிறானோ அதை உடனடியாகக் காண முடியும் அவன் எதை எண்ணுகிறானோ அது உடனே கைகூடும். நினைப்பது நடைபெறுகின்ற இத்தகைய சத்திய சங்கல்ப நிலையை அடைந்த பிறகும் எச்சரிக்கையாக இருந்து எந்த ஆசைகளுக்கும் அடிமையாகாமல் இருப்பவன் பிரம்ம ஞானம் பெறுகிறான். அந்த நிலையை அடைந்த பிறகு வழிதவறியவன் பல்வேறு சித்திகளைப் பெறுவான் ஆனால் அறுதி லட்சியத்திலிருந்து வழுவி விடுவான்.

இவ்வாறு சொல்லிவிட்டு சுவாமிஜி, சிவ சிவ என்று கூறியபடியே மீண்டும் தொடர்ந்தார்:

வாழ்க்கையின் இந்த மேலான ரகசியத்தைத் தியாகத்தின் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும் தியாகம் தியாகம்,தியாகம் இதுவே உங்கள் வாழ்க்கையின் மூல மந்திரம் ஆகட்டும் .

ஸர்வம் வஸ்து பயான்விதம் புவிந்ருணாம் வைராக்யமேவாபயம்

மனிதர்களும் உலகில் உள்ள பொருட்களும் அச்சத்தால் குழப்பட்டிருக்கின்றன வைராக்கியம்(துறவு) மட்டுமே பயமின்மையைத் தரும்.








தியானம் - சுவாமி விவேகானந்தர்

  Meditation Swami Vivekananda “தியானம் என்றால் மனத்தை தன் பக்கம் திருப்புவது . மனம் அனைத்து எண்ண அலைகளையும் நிறுத்துகி...