Wednesday, July 10, 2024

Education in Tamil literature - தமிழ் இலக்கியங்களில் கல்வி

 

 

கல்வி என்ற சொல்லின் ஆதாரச் சொல் 
‘கல்லுதல்’ என்பதாகும். கல்லுதல் என்றால் தோண்டுதல்.

 கல்வி:

கல்வி என்ற சொல்லின் ஆதாரச் சொல் ‘கல்லுதல்’ என்பதாகும். கல்லுதல் என்றால் தோண்டுதல். மனதில் மறைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொணர்ந்து மடைமாற்றம் செய்து திசை திருப்பவல்லது கல்வி.

 மனிதனுக்குள் ஏற்கெனவே பரிபூரணத் தன்மை என்பது இருக்கிறது. அதை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும்.


எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.              
சுவாமி விவேகானந்தர்

கல்வி கற்றவரின் சிறப்பு
:அழியாத செல்வமாகிய கல்வியைக் கற்றவர்கள் போற்றுதலுக்கு உரியவர் ஆவார்கள்.

“மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னலில் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னற்கு
தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை: கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு”


ஒரு நாட்டை ஆளக்கூடிய மன்னனை விட, குற்றமில்லாமல் கல்வி கற்றவன் சிறப்புடையவன். ஏனெனில், மன்னனுக்கு தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டாகும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கல்வி கற்றவர்களால் மட்டுமே வாழமுடியும் எனில் மிகையல்ல.

' கல்வியைப் பதித்து வைத்த இடத்திலிருந்து யாராலும் கவர்ந்துவிட முடியாது, தக்கவர்க்குக் கொடுப்பதனால் குறைவுபடாது. செல்வத்தைப் பறித்துக் கொள்ளும் அரசராயினும், பிறராயினும் அதனைக் கவர்ந்துக் கொள்ள முடியாது. எனவே ஒருவன் தனது மக்களுக்குப் பின்னர் தேவைப்படும் எனத் தேடிவைத்துச்; செல்ல வேண்டியது பொருட்செல்வமன்று. அதனைவிட உயர்ந்த கல்விச் செல்வமே.

'எச்சமென ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற" (134)
என்பது நாலடியார் தரும் கருத்து.

 இக்கல்வியானது,
'வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவு றாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது
கல்வி யென்னும்
உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம் பொருள் தேடி
உழல்வதென்னே" (69)

'என்பது விவேகசிந்தாமணி பாடல்

'வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே” (183)

என்று புறநானூறும்,

'எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியில் கற்றோரை வருக என்பர்” (38)

என்று வெற்றிவேற்கையும்
கற்றவர்கள் எக்காலத்தும் மதிக்கப்பட்டார்கள் என்பதை உணர்த்துகின்றன. கற்றவர்களை அரசன் விரும்பி ஏற்பான்; கற்றவர்கள் பார்வையில் சாதியில்லை; மதமில்லை; இனமில்லை; கீழோர் மேலோர் என்ற வேறுபாடில்லை; சமமாக மதிக்கும் மாண்பே அவர்களுடையது என்பது பெறப்படுகிறது.

எத்தகைய அறிஞனாயினும், பெரியோராயினும் ஆற்றைக் கடக்க நினைப்பவர்கள் தோணியில் செல்லும் போது தோணியோட்டி எந்தச் சாதி, எந்த இனம், எந்த மதம், எந்த நாடு, எந்த மொழி என்று பார்ப்பதில்லை. அவன் துணை கொண்டே அந்த ஆற்றைக் கடக்கின்றனர். ஏனெனில் அவன் அத்தொழிலைக் கற்றவன், கற்றவர்க்கு என்றைக்கும் மதிப்புண்டு. கல்வி இளையவர் என்றோ முதியவர் என்றோ, ஆண் என்றோ பெண் என்றோ பார்ப்பதில்லை. அது எல்லோரையும் சமமாக இணைத்து எழுச்சி கொள்ள வைக்கிறது.

'கற்றோர்க்குத் தம்மூர் என்று ஊரில்லை" 
என்று நான்மணிக்கடிகையும்,

'இளமையில்கல்" என்று ஒளவையும் மொழிந்தனர்.

'மன்னர்க்குத் தன்தேச மல்லாற்; சிறப்பில்லை
 கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு" (26)
என்று மூதுரை நல்வழி காட்டுகிறது.

கல்வி கற்காதவர்களின் நிலை:

முறையாக கல்வி கற்காமல் கற்றவர்களைப் போன்று நினைத்தக் கொள்ளும் மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கின்றார்கள். கல்வி கற்காதவர்களின் நிலையைப் பற்றி,
“கானம் மயில் ஆடக்கண்டு இருந்தவான் கோழி
தானும் அதுஆகப் பாவித்து –தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்றகவி”

மயில் ஆடுவதைப் பார்த்து வான்கோழி ஆடுவதைப் போன்றது கல்வி கற்காதவர்களின் நிலை. கல்வி கற்றவர்கள் ஆழமாக பொருள் விரித்துக் கூறுவர். கல்வி கற்காதவர்கள் பொருள் விரித்துக் கூறும் போது சொற்குற்றமும், பொருள் குற்றமும் இருக்கும் என்கிறார். கல்லாதவர்கள் இகழப் படுவார்கள், புகழப்படமாட்டார்கள்.

“கலைஆகிக் கொம்புஆகிக் காட்டகத்தே நிற்கும்
அவைஅல்ல நல்ல மரங்கள்! – சபைநடுவே
நீட்டுஓலை வாசியா நின்றான் குறிப்புஅறிய
மாட்டாதவன் நல்மரம்”


கல்விஅறிவும் குறிப்பறியும் குணமும் இல்லாதவர்கள் சிறந்த மரங்களாவர். மரங்களுக்கு கிளை, குறுங்கிளை இருப்பதைப் போல இவர்களுக்கும் கை, கால்கள் இருக்கின்றன. ஆறரிவுடைய மனித இனத்தில் பிறந்தும் கல்வி அறிவும், குறிப்புணரும் குணமும் இல்லாதவர்கள் காட்டிலுள்ள மரங்களுக்கே ஒப்பாவார்கள் என கல்வி கற்காதவர்களின் தோற்றத்தை எடுத்துரைக்கின்றார். கல்வியறிவு இல்லாதவர்கள் கற்றவர்களின் சொற்களை மதித்துக் கேட்க மாட்டார்கள்.


நாலடியார் - 14.கல்வி- 131 முதல் 140 வரை

கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே
நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து.

கல்விகள் முடிவில்லாதன; ஆனால் கற்பவருடைய வாழ்நாட்கள் சில! சற்றுப் பொறுமையாக நினைத்துப் பார்த்தால் அந்தச் சில வாழ்நாட்களிலும் பிணிகள் பலவாக இருக்கின்றன. ஆதலால் நீரை நீக்கிப் பாலைப் பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையார், நூலின் தன்மைகளை அறிந்து நல்ல நூல்களையே கற்பர்.


திருக்குறள் கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.


பொருள்
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.


கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

பொருள்
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை


திருக்குறள் உணர்த்தும் கல்வி சிந்தனைகள்

********************************************************

சுவாமி விவேகானந்தரின் பன்முகங்களை விவரிக்கும் வகையிலான கட்டுரைகள்

No comments:

Post a Comment

Sivaprakasa Maha Vidyalayam - Thumpalai - Point Pedro - 13-09-2024

Personality Development Programme 10.30 am to 11.30 am Participants - 80 ஜீவனெல்லாம் இறைவன் என்ற ஞானத்திலே  பாடல் Jeevanellam Iraiva...